தீபாவளிக்கு முந்தய நாள் எம தீபாவளி.

0
78

இந்த பண்டிகை நமக்கு மட்டும் அல்ல…எம தர்ம ராஜனுக்கும் மிகவும் பிடித்த பண்டிகை என இதிகாசங்கள் சொல்கிறது.

சூரியனின் புத்திரன் யம தர்ம ராஜன்

சனியின் மூத்தவர் மட்டுமல்ல சனிக்கு அதிதேவதையும் கூட.

யமதர்ம ராஜனை வழிபடுபவர்களை சனி பாதிப்பதில்லை..

யமுனா தேவியின் சகோதரம் மற்றும் ஞானத்தின் திறவு கோல் இவரே!

தர்மத்தை நிலை நாட்டி மோட்சத்துக்கு வழி காட்டுபவர்.

நம் கர்மவினைகள் தெரிந்தவரும் அதை அழிப்பவரும் ஆவார்.

எளிதில் நம்மை வீழ்த்துபவர், நம் நிழல் போல் நம்முடன் பயணம் செய்பவர்,

நம் முன்னோர்களுக்கு வழிகாட்டி..!!

இதை மனதில் இருத்திக் கொண்டு மேலே படியுங்கள்…!

தமிழ் நாட்டில் தீபாவளி திருநாள் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஆனால் வட மாநிலங்களில் தீபாவளியை ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

திரயோதசி திருநாள்:

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி திதி அன்று நம் வீட்டுக்கு மகா லட்சுமி வருவதாக ஐதீகம்.

அவளை, வரவேற்கும் விதமா வீடுகளில் தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம்.

இந்தத் திருநாளை ஒரிசாவில், ‘தன திரயோ தசி’ என்ற பெயரில் ஆராதிக்கிறார்கள்.

திரயோதசி தினத்தன்று தங்களது வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள்.

மஹாளய பட்ச நாட்களில் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லி நமக்கு தெரியும்.

அப்படி வருபவர்கள் தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு மீண்டும் திரும்பி செல்வதாகவும் சாஸ்திரம் உரைக்கிறது.

அப்படி திரும்பி போகின்ற பித்ருக்களுக்கு வழி தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் தீபம் ஏற்ற சொல்லி இதிகாசங்கள் உரைக்கின்றன .

இந்த தீபத்தை வீட்டின் உயரமான இடங்களில் ஏற்றுவது மிகவும் சிறப்பு.

வீட்டில் வழக்கமாக விளக்கோடு சேர்த்து ஒரு அகல்தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றினாலே போதுமானது.

அதுவே, எம தீபம்…..!!..

இதை உங்கள் வீட்டிலும் , உங்கள் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும் ஏற்றலாம்.

இப்படி தீபம் ஏற்றுவதினால் விபத்துகள், திடீர் மரணங்கள் சம்பவிக்காது. நோய் நொடி அண்டாது என்பது நமது இந்து சாஸ்திர நம்பிக்கை.

இரண்டாவது நாள் தீபாவளித் திருநாள்.

இந்த நாளில், வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலை நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகள் செய்வர்.

சிலருக்கு இது விரத நாட்களும் கூட…

மூன்றாம் நாளில் விநாயகர், சரஸ்வதிதேவி மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன், வணிகர்கள் புதுக்கணக்கும் எழுதுவர்.

சில இடங்களில், கேதார கௌரி விரதமும் லட்சுமி குபேர பூஜையும் செய்வர்.

நான்காம் நாளில் இந்திரன் பெய்வித்த பேய் மழையிலிருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக கொண்டாடப்படுகிறது.

சிலர் இந்த தினத்தை, புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுவர்.

ஐந்தாம் நாளில் ‘எம துவிதா’வாக வட மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள்.

‘பால்பிஜி’ ன்னும், ‘பையாதுஜ்’ன்னும் போற்றப்படுது இந்தத் திருநாள்.

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு முறை ஐப்பசி மாத வளர் பிறை துவிதியை திதி அன்றைக்கு தன் சகோதரி ‘எமி’யின் வீட்டுக்குச் சென்றார் எமதர்மன்.

அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூட்டி, திலகமிட்டு அன்புடன் வரவேற்றாள் சகோதரி எமி.

இருவரும், ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகள் வழங்கி தங்கள் பாசத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்பொழுது எமதர்மன், ”இந்த தினத்தில், தன் சகோதரியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். அவர்களுக்கு எமவாதனை கிடையாது’’ என்று வரம் தந்தாராம்!

அதனால்தான், எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துவது வழக்கம்.

சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, ‘எமனுக்குப் பிடித்த விழா’ என புராணங்கள் சொல்கின்றது.

அதனால், தீபாவளியை மட்டுமல்லாமல் அதோடு சேர்த்து எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய நாட்களிலும் தீபம் ஏத்தலாம்.

கீழே உள்ள யம தர்ம ராஜாவுக்கு உண்டான மந்திரத்தை இந்த ஐந்து நாட்களும் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பு.

ஸ்ரீ யமாய நம:

யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

1. பரணி, மகம், சதயம் நக்ஷத்திரங்களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது அதிக சிறப்பு.

2. யமனை அதிதேவதையாக கொண்ட சனைஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள் மற்றும் சனி தசா நடப்பில் உள்ளவர்கள் / கோச்சார சனியால் பாதிப்புக்கு உண்டானவர்கள் யம தீபம் ஏற்றுவது நல்ல பலன்களை தர வல்லது.

3. ஆயுள் ஸ்தானத்தில் சனைஸ்வர பகவான் நீசம் அல்லது பலமிழந்தவர்கள் / ஜனன ஜாதகத்தில் சனி வக்கிரம் பெற்றவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சுய ஜாதகத்தில் சூரியன் + சனி சேர்க்கை உள்ளவர்களுக்கு இந்த வழிபாது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

6. ஜனன கால ஜாதகத்தில் அஸ்வினி , மகம் , மூலம், திருவாதிரை , சுவாதி , சதயம் நட்சத்திரங்களில் சனி நிற்க பிறந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்த ஆண்டு நவம்பர் 02ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றுவது மிகவும் உன்னதம்.

அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.

எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

முன்னோர் ஆசிகள் முழுமையாக கிடைக்கப் பெருவீர்கள்.

செய்தொழில் முன்னேற்றம் காணும்.

திருமணத் தடைகள் விலகும்,

சொத்துகள் சேரும்.

லஷ்மி கடாட்ஷம் பெருகும்.

வாழ்வில் அனைத்து தடைகளும் நீங்கி சுப காரியங்கள் நடைபெறும்.

முக்கியமாக இந்த ஐந்து நாட்களும் அசைவம் தவிர்ப்பது சகல சௌபாக்கியங்களையும் உங்கள் இல்லம் கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்த்துக்கள்…!!!