செப். 29ஆம் தேதி நடக்கும் 100 கி.மீ. ‘நோ ஹாங்கிங் சேலஞ்ச்’! பின்னணி என்ன?

0
25

சாலையில் செல்லும் வாகனங்கள் மூலம் எழுப்பப்படும் ஒலியின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூருவில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் 100 கிலோ மீட்டர் ‘நோ ஹாங்கிங் சேலஞ்ச்’ கொண்டு வந்துள்ளது.
ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் சாலையில் பல சமயங்களில் வன்முறையையும் விளைவிக்கும் ஒரு பிரச்சனை ஹாங்கிங் எனப்படும் வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலி. பெங்களூருவின் அதிக ஒலி அடிக்கும் பழக்கத்தை சரி செய்ய, அந்நகரத்தில் உள்ள தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.
#Bengaluru100KmsNoHonkingChallenge என்ற ஹேஷ்டேக்கும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வின் முதல் பகுதி செப்டம்பர் 29 அன்று தொடங்கும். இந்த விழிப்புணர்வு பேரணியில் உள்ளூர்வாசிகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை விதான சவுதா என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஜிபிஓ சந்திப்பில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் ஒலி அடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்:

வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்புவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை பிடித்துக்கொண்டு நடைபாதைகளில் தன்னார்வலர்கள் அணிவகுத்து நிற்பார்கள். இதுகுறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறுகையில், எந்த நேரத்திலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஹாங்கிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, நாம் ஏற்படுத்தும் தீங்கு பற்றி கவலைப்படாமல் நம்மில் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக வாகனத்தில் ஒலியை எழுப்புகிறோம்.
எனவே, உள்ளூர்வாசிகள் இவ்விழிப்புணர்வில் பங்கேற்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர். மக்கள் ஒரே நேரத்தில் குறைந்தது 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு தங்கள் வாகனத்தில் இருந்து ஒலி எழுப்புவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், யாரேனும் எக்காரணம் கொண்டும் ஒலி எழுப்ப நேர்ந்தால், அவர்கள் 100 கி.மீ. தூரத்தை பூஜ்ஜியத்திலிருந்து மறுதொடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, வாகன ஓட்டிகள் இந்த 100 கிலோ மீட்டர் ஒலி எழுப்பாத சவாலைக் கவனித்தால், அவர்கள் அடிக்கடி வாகன ஒலியை பயன்படுத்துவதைத் தவிர்க்க உந்துதல் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. ஏறக்குறைய ஒரு கோடி வாகனங்கள் தினமும் கண்மூடித்தனமாக சத்தமிடுவதன் விளைவு, நகரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. வாகன ஓட்டிகள் தங்களையும் மற்றும் தங்களை சுற்றியுள்ள மக்களை காப்பாற்ற மட்டுமே ஒலி அடிக்க வேண்டும் என்று அத்தன்னார்வ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.