பழமையான கலைப்பொருட்கள், பொக்கிஷங்களை மீட்டு வந்த பிரதமர் மோடி!

0
21

அமெரிக்காவில் பிரதமர் மோடியிடம் இந்தியாவுக்கு சொந்தமான 157 கலைப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன, இந்த கலைப்பொருட்களை பிரதமர் மோடி கையோடு டெல்லிக்கு எடுத்து வந்துள்ளார். இதில் ஒரு கலைப்பொருள் 7000 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது.
குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், 76வது ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் டெல்லியிலிருந்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் டெல்லி வந்தடைந்திருக்கிறார்.

பிரதமர் மோடி நாடு திரும்புவதற்கு முன் இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 157 கலைப் பொருட்களை அமெரிக்கா, பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறது.

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, கற்சிலைகள், லைம் ஸ்டோனால் செய்யப்பட்ட பொருட்கள், ஜாடி போன்றவை இவற்றில் அடங்கும்.
இந்த விலைமதிப்பில்லாத 157 கலைப்பொருட்களில் 60 இந்து மதத்துக்கும், 16 புத்த மதத்துக்கும், 9 ஜைன மதத்துக்கும் தொடர்புடையவை. இப்பொருட்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத் என பல மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை ஆகும்.

இந்தியா கொண்டுவரப்பட்டுள்ள 157 கலைப் பொருட்களில் பெரும்பாலானவை 11 முதல் 14வது நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். இதில் உள்ள ஒரு காப்பரால் ஆன கலைப்பொருள் கிமு 2000 நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட கலைப்பொருட்களில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரையில் ஒரே ஒரு கலைப்பொருள் மட்டுமே இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2014 முதல் 2021 வரை 200க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இன்னும் சொல்லப்போனால், 1976 முதல் 2013 வரை கூட மொத்தமே 13 கலைப்பொருட்கள் தான் இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அப்படிப் பார்க்கையில், கடந்த 40 ஆண்டுகளை கணக்கிடும்போது கடந்த 7 ஆண்டுகளில் தான் இந்தியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட கலைப்பொருட்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளன.