கராச்சி ஹல்வா

0
19
radiomadurai

செய்முறை :

(200 கிராம்) 1 கப் கார்ன் மாவை தேவையான நீர் ஊற்றி கட்டிகள் இல்லாது பால் போன்ற திக்னஸில் கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்த அதே கப்பில் இரண்டரை கப் சர்க்கரை போட்டு அது மூழ்கும் அளவு நீர் (2கப்) ஊற்றி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்தே காய்ச்சவும். கம்பி பதம் எல்லாம் தேவையில்லை லேசான பிசுபிசுப்பில் கையில் ஒட்டும் பதத்தில் வந்ததும் கரைத்த கார்ன் மாவை போட்டு அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நிறுத்தாமல் கிளறவும். மாவு பளபளப்பாக கண்ணாடி போல வந்ததும்..

மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற ஃபுட் கலரை சேர்த்து அது நன்கு மாவு முழுவதும் பிடிக்கும்படி கிளறவும். இப்போது முதலில் 1/4 கப் நெய் சேர்த்து கிளறவும். ஆரம்பத்தில் நெய் உடனே மாவுடன் சேராது ஒரிரு நிமிடங்கள் கிளறக் கிளற நெய்யை மாவு உள்வாங்கும். இது நன்கு உள்வாங்கியதும்..

மீண்டும் கால் கப் நெய் சேர்த்து இதுவும் நன்கு மாவுடன் கலக்கும் வரை கிளறி ஏலக்காய் பவுடர் 1/4 ஸ்பூன் சேர்க்கவும். பிஸ்தா, முந்திரி & பாதாம் பருப்புகள் தலா20 எடுத்து மூன்று நான்காக உடைத்து பாதியை இதில் சேர்த்து கிளறவும். நிறுத்தாமல் கிளற வேண்டும். அல்வா பாத்திரத்தின் அடிப்புறம் பிடிக்காமல் இருப்பதே பதம்.

அல்வாவை திருநெல்வேலி அல்வா போல வந்ததும் எடுக்காமல் 20 நிமிடங்கள் கிளறினால் தான் அந்த பாம்பே அல்வா பதம் கிடைக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இப்படியே 15முதல் 20 நிமிடங்கள் கிளறி, பின்பு அடுப்பிலிருந்து எடுத்து அடிப்புறம் நெய் தடவிய சற்று குழிவான பாத்திரத்தில் அல்வாவை கொட்டி பரத்தி விடவும்.

மீதி பிஸ்தா, முந்திரி பாதாமை அல்வா மீது பரவலாக தூவி அதை அல்வாவில் பதியும் படி மென்மையாக அழுத்திவிட்டு இதை நன்றாக மூடி போட்டு மூடி 2 மணிநேரங்கள் நன்கு ஆற வைக்கவும். பிறகு இதை ஒரு தட்டில் கவிழ்த்து நீங்கள் விரும்புகின்ற வடிவில் துண்டுகளாக்கி பரிமாறவும்.

ஸ்பாஞ்ச் போன்ற மென்மையான முந்திரி, பாதாம், பிஸ்தா, பருப்பின் அலாதியான ருசியுடன் பாம்பே/கராச்சி அல்வா ரெடி! இந்த பதத்தில் நிறுத்தாமல் கிளறுவதே லட்சியம்! ஸ்பாஞ்ச் போன்ற பதத்தில் பாம்பே அல்வா நிச்சயம்.!

கோதுமை அல்வா : இதே பதத்தில் கார்ன் மாவுக்கு மதில் கோதுமை மாவு சேர்த்து செய்தால் கோதுமை அல்வா தயார். அதற்கு ஃபுட் கலர் தேவையில்லை. இந்த பதத்தில் கடைசி 20 நிமிடங்களுக்கு பதில் 10 நிமிடங்கள் கிளறினால் போதும்.