அடி உரமாக ஜிப்சம் கொடுப்பதன் மூலம் நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள்.

0
25

தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் போல் சுண்ணாம்பு மற்றும் கந்தகச்சத்து குறைபாடு ஏற்படும் பட்சத்திலும் நிலக்கடலையில் மகசூல் குறைவு ஏற்படுகிறது. ஜிப்சம் மண்ணில் உள்ள உப்பு அல்லது கார பொருட்களை அகற்ற ஒரு முகவராக செயல்படுகிறது. ஜிப்சத்தில் சராசரியாக 23% சுண்ணாம்புச்சத்தும் (Calcium) 18% கந்தகச்சத்தும் (Sulfur) கலந்துள்ளது. அடர் தன்மை கொண்ட களி மண்ணைக்கூட இலகுவாக்கி வேர் வளர்ச்சிக்கு ஜிப்சம் துணை புரிவதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகமாக்குவதுடன், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து மண் இலகுவாக மாறுவதால் அதிக எண்ணிக்கையில் விழுதுகள் இறங்கி மிகுதியாக காய்கள் பெற உதவுவதுடன், பிஞ்சு மற்றும் பொக்குக்காய்கள் இல்லாமலும், காய்களின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் விளைச்சலைப் பெருக்கி மகசூலை அதிகரிக்கிறது.

சுண்ணாம்புச்சத்தின் அவசியம்

இலை தண்டு மற்றும் வேரின் உறுதித் தன்மைக்கு சுண்ணாம்புச் சத்து உதவுகிறது, மேலும் சுண்ணாம்புச் சத்து குறைபாடு உள்ள செடிகளில் இலைகளின் நுனி மற்றும் ஓரங்கள் கிழிந்து காணப்படும். விழுதுகள் மண்ணில் இறங்கியவுடன், நிலக்கடலை உருவாக்கத்திற்காக காய்கள் நேரடியாக சுண்ணாம்புச்சத்தை எடுத்துக் கொள்ளும். போதிய அளவில் சுண்ணாம்புச் சத்து கிடைக்காதபட்சத்தில் அதிக அளவில் பொக்கை கடலை உருவாகி மகசூல் குறைய வாய்ப்புள்ளது. பூக்களில் சூல் பை சிதைவு ஏற்படுவதுடன் விதைகள் வளர்ச்சி குன்றி கருப்பாக இருக்கும்.

கந்தகச்சத்தின் அவசியம்

பயிர்களில் பச்சையம் உருவாவதற்கு கந்தகச்சத்து மிகவும் அவசியம், அத்தகைய கந்தகச்சத்து குறைபாடு ஏற்படும் பட்சத்தில் இலைகள் வெளிறியும், மெலிந்தும், மஞ்சள் நிறமாகவும் காணப்படும். பயிர்கள், தழைச்சத்தை பயன்படுத்தும் திறனையும் அதிகரிக்கிறது. நிலக்கடலை வித்தில் எண்ணெய் அளவு அதிகரிக்க கந்தகச்சத்து மிக முக்கியப் பங்குவகிக்கிறது.
ஜிப்சம் உரமிடும் முறை

நிலக்கடலை விதைப்புக்கு முன் இறுதி உழவின் போது ஏக்கருக்கு 80 கிலோ என்ற அளவில் அடி உரமாக ஜிப்சம் இட வேண்டும். பிறகு, விதைத்த 42-வது நாளில் களை எடுத்தலின் போது ஏக்கருக்கு 80 கிலோ என்ற அளவில் செடிகளுக்கு இடையே ஜிப்சம் உரம் தூவி மண் அனைக்க வேண்டும். அடியுரம் மற்றும் மேலுரம் இரண்டும் சேர்த்து ஏக்கருக்கு மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாக ஜிப்சம் இடும் பட்சத்தில் மகசூல் குறைவும், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உரமிடும் பட்சத்தில் நிலம் ரசாயன தாக்குதலுக்கு உட்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவான 160 கிலோ / ஏக்கர் என்ற அளவில் மட்டும் ஜிப்சத்தை நிலக்கடலைக்கு உரமாக இடவும்.

ஜிப்சத்தை நிலங்களில் இடுவதற்காக மூட்டைகளில் இருந்து வெளியே எடுக்கும் போது நிறைய கட்டிகளாக காணப்படும். கட்டிகளுடன் அப்படியே இறைக்காமல் கட்டிகளை தூள்களாக உடைத்து சல்லடை கொண்டு நன்கு சளித்து பின்னர் நிலங்களில் இறைத்தால் அனைத்து செடிகளுக்கும் சமச்சீராக சத்துக்கள் கிடைக்கும்.

மண் ஈரமாக இருக்கும் போது ஜிப்சம் இடுவதாலோ அல்லது ஜிப்சம் இட்ட பிறகு தண்ணீர் பாய்ச்சுவதாலோ கால்சியம் மற்றும் சல்பர் சத்துக்கள் போதுமான அளவில் நிலக்கடலைக்கு கிடைக்கும்.