குறள் வழி நடப்போம்

0
20

ஒரு வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்கள். அந்நாய் அருகில் இருந்த மரத்தில்
குடியிருந்த காகத்துடன் நட்பாய் இருந்தது. ஒரு நாள் காகம் கவலையுடன் இருந்தது.
இதைக்கண்ட நாய்க்குட்டி காகத்திடம் சென்று,

“என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்?” என்று கேட்டது.

“அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றனர்.
அவைகளின் செயல்களை எல்லாம் பாராட்டுகிறார்கள்.

ஆனால் என்னை வெறுத்து கல்லை எறிந்து விரட்டுகிறார்களே ஏன்?” என்று கேட்டது காகம்.
இதற்குக் காரணம் உங்கள் ஒழுக்கமின்மை தான்.
இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள் என்று நாய்க்குட்டி கூறியது.

“எங்களிடம் அப்படி என்ன ஒழுக்கமின்மை இருக்கிறது?
கடமை, சுத்தம் இப்படி பல நல்ல குணங்களில் நாங்கள் தான் சிறந்தவர்கள்!”, என்று சொன்னது காகம்.
உண்மை தான்! என்றது நாய்க்குட்டி.

பகிர்ந்து உண்ணும் பண்பைக் கற்றுத் தந்ததும் நாங்கள் தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.
ஆமாம், அதுவும் உண்மை தான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படிப் பல நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?
அதற்கு நாய்குட்டி, ஏன் என்று நான் சொல்லுகிறேன்.
உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் ஒழுக்கமின்மையால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள் என்று கூறியது நாய்க்குட்டி.

அப்படி என்ன ஒழுக்கமின்மை எங்களிடம்? எனக் கேட்டது காகம்.

“மனிதர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை திருடுவது!” என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.

ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்.
அவரின் ஒழுக்கமின்மை அவரின் அத்தனை நல்ல பண்புகளையும் மறைத்து ஒழுக்கமின்மையையே முன்னிறுத்தும்.

குறள்: #137
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) – Domestic Virtue
அதிகாரம்: ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai) – The Possession of Decorum

குறள்:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

Kural in Tanglish:
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin
Eydhuvar Eydhaap Pazhi.

விளக்கம்:
ஒழுக்கத்தினால் எல்லாரும் மேன்மையை அடைவர்;
ஒழுக்கத்திலிருந்து தவறுபவர் அடையக் கூடாதப் பழியை அடைவர்.
Translation in English:
‘Tis source of dignity when ‘true decorum’ is preserved;
Who break ‘decorum’s’ rules endure e’en censures undeserved.

Meaning:
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.