தாலிபான்களுக்கு எதிராக ஆப்கன் பெண்கள் ஓசையில்லாமல் செய்துவரும் புரட்சி!

0
19

ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில்
வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாலிபான்களுக்கு எதிராக சத்தமில்லாமல் ஒரு புரட்சியை செய்து வருகிறார்கள் அந்நாட்டு பெண்கள்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி புதிய ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள் தாலிபான் போராளிகள். இவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான போக்கை கொண்டிருப்பவர்கள் என அறியப்படுகிறார்கள். புதிய ஆட்சியை நிறுவினாலும் கூட பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் அளிக்கவில்லை. மேலும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பெண்களுக்கான உரிமைகளை தாலிபான்கள் மறுத்துள்ளனர்.

பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு, குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் பெண்களுக்கு அனுமதி, அவ்வாறு அனுமதிக்கப்படும் பெண்களும் திரைச்சீலை உதவியுடன் தனியாக பிரித்து அமரவைக்கப்பட்டிருப்பது, முகம் முதல் கால் வரை ஹிஜாப் எனப்படும் கருப்பு ஆடைகளால் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கண்டிப்பான விதிமுறைகளை வகுத்துள்ளனர்.

தாலிபான்களின் இச்செயல் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், காபுலில் உள்ள ஷாகித் ரப்பானி பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி தாலிபான்களுக்கு ஆதரவான கூட்டம் ஒன்று நடந்தது. இதில் தாலிபான்களுக்கு ஆதரவான கோஷங்களை உள்ளடக்கிய பதாகைகளுடன் பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாகவும் சென்றனர். இந்த கூட்டத்திலும், பேரணியிலும் கலந்து கொண்ட பெண்கள் உச்சி முதல் பாதம் வரையில் உடலை முழுமையாக ஹிஜாப் எனும் கருப்பு ஆடையால் மூடிக்கொண்டனர்.

தாலிபான்களின் வற்புறுத்தலால் பெண்கள் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இச்செயலுக்கு, ஆப்கானிஸ்தான் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தாலிபான்கள் தங்களை அனுமதிக்காத நிலையில் ஆப்கானிஸ்தானின் கலாச்சாரத்தையே தாலிபான்கள் மாற்றியமைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.