நம்பிக்கை இழந்தவன்...! வாழ்க்கையின் மிகப்பெரிய பாடத்தை உணர்த்தும் நீதிக்கதை
ஒரு காட்டில் பல எறும்புகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அவற்றில் ஒரு செவ்வெறும்பும், ஒரு கட்டெறும்பும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன.
ஒருநாள் இரண்டும் உணவு தேடி அலைந்தன. எங்கும் உணவு கிடைக்காததால், கடைசியாக ஒரு குளத்தின் கரையில் இருந்த மாமரத்தைப் பார்த்தன. மரத்தில் பழுத்த மாம்பழங்கள் நிறைய தொங்கிக் கொண்டிருந்தன. இரண்டும் ஒரு மாம்பழத்தின் மீது ஏறி அமர்ந்து சாப்பிடத் தொடங்கின.
அப்போது திடீரெனப் பலத்த காற்று வீசியது. அவை அமர்ந்திருந்த மாம்பழம் பறிக்கப்பட்டு குளத்தில் விழுந்தது. இரண்டு எறும்புகளும் தண்ணீரில் தத்தளிக்கத் தொடங்கின.
“நண்பா! இப்போது நாம் என்ன செய்வது?” என்று பதற்றத்துடன் கேட்டது செவ்வெறும்பு.
“கவலைப்படாதே! நிச்சயம் யாராவது நமக்கு உதவி செய்வார்கள். அதுவரை நீந்திக்கொண்டே இருப்போம்” என்றது கட்டெறும்பு.
நேரம் கடந்தது. இரண்டும் சோர்வடைந்தன. இனி உயிர் பிழைக்க முடியாது என்று நினைத்த செவ்வெறும்பு நம்பிக்கையை இழந்து நீந்துவதை நிறுத்தியது. சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
கட்டெறும்பு மட்டும் தொடர்ந்து போராடியது. அப்போது அங்கு வந்த சில எறும்புகள், “இந்தக் குளத்தில் விழுந்த யாரும் உயிருடன் திரும்பியதில்லை” என்று கூறின.
அதைக் கேட்ட கட்டெறும்பும் மனம் தளர்ந்து நம்பிக்கையை இழந்தது. நீந்துவதை நிறுத்தியதால் அதுவும் நீரில் மூழ்கி இறந்தது.
பின்னர் இறைவனைச் சந்தித்த கட்டெறும்பு, “என் உயிரை ஏன் இவ்வளவு சீக்கிரம் எடுத்தீர்கள்?” என்று கேட்டது.
அதற்கு இறைவன், “நான் உன்னைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு உன் மீதான நம்பிக்கையை இழந்து போராடுவதை நிறுத்திவிட்டாய். வாழ்க்கையில் கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் போராட வேண்டும்” என்றார்.
நீதி:
வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இழந்தவன், வாழ்வில் அனைத்தையும் இழக்க நேரிடும்.